சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேனி எம்பி ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரியகுளம் கோம்பை வனப் பகுதியில் கடந்த 27-ம் தேதி சோலார் மின்வேலியில் சிறுத்தை சிக்கியது. அதை வனத் துறையினர் விடுவிக்க முயன்றபோது உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரனை தாக்கிவிட்டு சிறுத்தை தப்பியது.
மறுநாள் அருகில் உள்ள மற்றொரு வேலி யில் இந்த சிறுத்தை சிக்கி இறந்து கிடந்தது. இது தொடர்பாக அந்தத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன்(35) என்பவரை வனத் துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சத்யம் சரவணன் கூறும்போது, "தேனி எம்பி ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளது.
தற்காலிகமாக கிடா அமைத்து ஆடு வளர்த்தவரை கைது செய்தது தவறு. முறையாக விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து வனத் துறையினர் ரவீந்திரநாத்தின் தோட்ட மேலா ளர்கள் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்க மாநிலத் தலைவர் சத்யம் சரவணன் தலைமையில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர், விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், இந்த விவ காரத்தில் தேனி எம்பியிடம் விசாரணை நடத்த வேண்டும். கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியனை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட் டோர் கலைந்து சென்றனர்.