(கோப்புப்படம்). 
க்ரைம்

குஜராத்தில் ரூ.90 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜாம்நகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரேம்சுக்தேலு கூறியதாவது: சூரத் மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபகாலத்தில் இந்த அளவுக்கு கள்ள நோட்டுகள் பிடிபடுவது இதுவே முதல்முறையாகும்.

கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கள்ள நோட்டு மோசடிக்கு ஹித்தேஷ் கோடதியா என்பவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார். இவர், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக படேல், தினேஷ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையை அடுத்து, செப்டம்பர் 29-ம் தேதி காம்ரெஜ் நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஓர் ஆம்புலன்ஸிலிருந்து ரூ.25.80 கோடி கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், கோடதியாவின் சொந்த ஊரான ஜாம்நகர் கல்வாட் தாலுகாவில் உள்ள மோடா வாடாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.53 கோடி கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ரூ.2,000 மதிப்பைக் கொண்ட கள்ள நோட்டுகளாகும். மொத்தம் 25 பெட்டிகளில் கள்ள நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிக்க கள்ள நோட்டுகளை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கடத்தி வருவதை கோடதியா வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்த கள்ள நோட்டுகளை ஆய்வு செய்ததில், உண்மையான ரூபாய் நோட்டில் உள்ள 17 அடையாளங்களில், 14 அடையாளங்கள் பொருந்தியிருந்தன. உள்ளே அச்சிடப்பட்ட ரூபாயின் மதிப்பு, நடுவிலிருக்கும் வெள்ளி நூலிழை ஆகிய அடையாளங்கள் மட்டுமே,கள்ள நோட்டுகளில் காணப்படவில்லை. மேலும், கள்ள நோட்டுப் புழக்கத்துக்கு உடந்தையாக இருந்த, விகாஷ் ஜெயின், தினநாத் யாதவ் ஆகியோரைத் தேடி வருகிறோம். அதேபோல, மறைத்து வைக்கப்பட்ட மேலும் ரூ.10 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT