சென்னை: தம்பியை கொலை செய்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிக்குப் பழியாக ரவுடியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்தவர் சேட்டு என்ற கார்த்திகேயன் (33). பேசின் பாலம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 30-ம் தேதி இரவு காந்தி நகர் பொதுக்கழிப்பிடம் அருகே கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று, கார்த்திகேயனை கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து, பேசின்பாலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை தொடர்பாக யானைகவுனி பிரேம்குமார் (37), வியாசர்பாடி குரு என்ற நரேஷ்குமார் (29), கொடுங்கையூர் சுகுமார் என்ற ஸ்பீடு சஞ்சய் (19), புளியந்தோப்பு கார்த்திக் (21), சவுகார்பேட்டை யுவராஜ் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சஞ்சய் என்பவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன், கடந்த 2013-ம் ஆண்டு பேசின் பாலம் பகுதியில் ரஞ்சித் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரஞ்சித்தின் அண்ணன் பிரேம்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திகேயனை கொலை செய்தார் என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.