இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2017 மே 5-ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இலங்கைக்குச் செல்லவிருந்த திருவள்ளுர் மாவட்டம் நெமிலிச்சேரியைச் சேர்ந்த மஹின் அபுபக்கர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த முகமது மீரா ரஜுலுதீன் ஆகியோரிடமிருந்து 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நீதிபதி தனது உத்தரவில், “போதைப் பொருள் கடத்தலால், இளைய சமுதாயம் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. நாட்டின் நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை போதை பொருட்களால் பாதிக்கப்படுகின்றன.
பயங்கரவாதக் குழுக்களும் அதிக அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதால், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.