ஷாஜஹான் 
க்ரைம்

2-வது மனைவியை கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடியவர் கைது: பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை, காட்பாடா மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜஹான் (47). இவர் தனது முதல் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தோல் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரது நிறுவனத்தில் டெய்லராக பணி செய்த ஹசீனா பேகம் (37) என்பவரை 2016-ல்2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவரை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் கார்டன் 6-வது சந்து பகுதியில் வாடகை வீட்டில் தங்க வைத்திருந்தார். அவ்வப்போது ஹசீனா பேகம் வீட்டுக்குச் சென்று தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், ஷாஜஹான் கடந்த 27-ம் தேதி இரவு ஹசீனாபேகத்தின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், மறுநாள் காலை ஹசீனாபேகம் இறந்து கிடந்ததாக வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், ஹசீனா பேகத்தின் தாயார், தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனப் புகார் தெரிவித்தார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸார் இயற்கைக்கு மாறானமரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில்,ஹசீனா பேகம் மூச்சடைக்கப்பட்டும், உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டும் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரின் கணவர் ஷாஜஹானை பிடித்து போலீஸார் விசாரித்தனர். முதலில் தான் கொலை செய்யவில்லை எனக்கூறி நாடகமாடிய அவரை போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்ததால், மனைவியைக் கொலை செய்ததை ஷாஜஹான் ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

ஆத்திரத்தில் கொலை: வாரம் ஒருநாள் மட்டும் வீட்டுக்கு வரும் ஷாஜஹான் தன்னுடன் அதிக நாட்கள் தங்க வேண்டும் என்று ஹசீனா பேகம் அவ்வப்போது வலியுறுத்தி வந்துள்ளார். நிறுவனத்தில் இது தொடர்பாகப் பேசி சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக ஷாஜஹான் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கெஞ்சிய கணவர்: ஹசீனா பேகம் இறந்ததை அறிந்து வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் தவமணி அங்கு சென்றபோது, ஷாஜஹான் மனைவியின் சடலத்தைக் கட்டியணைத்து அழுது கொண்டிருந்தார். உடலில் காயம் இருந்ததை அறிந்த போலீஸார், 'பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்புவோம்' என்று கூறியபோது ஷாஜஹான் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். ஆனால், ஷாஜஹான் மனைவி உடலை பிரேதப் பரிசோதனை செய்யுங்கள் எனக் கெஞ்சியுள்ளார். அப்போதுதான் சந்தேகம் வராது; பிரேதப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய மாட்டார்கள் என எண்ணியுள்ளார். இருப்பினும் உண்மை வெளிவந்துவிட்டது என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT