காரைக்குடி அருகே திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியை, அவரது காதலன் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ் மகள் சினேகா (21). இவர் அழகப்பா அரசுக் கல்லூரியில் இளநிலை கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் இலுப்பக்குடி புதுகுடியிருப்பைச் சேர்ந்த உறவினரான கூலித் தொழிலாளி கண்ணனை (25) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், சினேகாவை திருமணம் செய்து வைக்குமாறு, அவரது குடும்பத்தாரிடம் கண்ணன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவரது அக்காவின் திருமணம் முடிந்த பிறகே, இதுகுறித்து பேச முடியும் என்று குடும்பத்தினர் கூறிவிட்டனர். தற்போது பதிவுத் திருமணம் செய்துவிட்டு, பிறகு பெரியோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கண்ணன் கூறியுள்ளார்.
இதற்கு அவர்கள் மறுக்கவே, சினேகாவின் தாத்தாவை கண்ணன் தாக்கியுள்ளார். இதனால் சினேகா, கண்ணனிடம் இருந்து படிப்படியாக விலகத் தொடங்கினார்.
ஆத்திரத்தில் இருந்த கண்ணன் நேற்று ஏற்கெனவே பதிவுத் திருமணத்துக்காக தான் கொடுத்து வைத்திருந்த சான்றுகளை எடுத்துக் கொண்டு மாத்தூர் ரேஷன் கடை அருகே வருமாறு சினேகாவிடம் மொபைல் போனில் கூறியுள்ளார்.
இதையடுத்து அவற்றை எடுத்துக்கொண்டு சினேகா ஸ்கூட்டரில் சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து சினோகாவின் தலையில் கண்ணன் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த சினேகா உயிரிழந்தார். சத்தம் கேட்டு அப்பகுதியினர் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் கண்ணன் தப்பினார். காரைக்குடி டிஎஸ்பி வினோஜி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
தப்பியோடிய கண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.