வாணியம்பாடி ரயில்வே மேம்பாலம் மீது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த தேவராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனி(22). இவர், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
பிறகு, மீண்டும் ஆந்திரா செல்ல வாணியம்பாடி புதூர் ரயில்வே மேம்பாலம் மீது வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அங்குள்ள தடுப்பு மீது மோதியது.
அப்போது, 40 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த முனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி நகர காவல் துறையினர் அங்கு வந்து முனி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர்.
இது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.