க்ரைம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.45.5 லட்சம் மோசடி: 10 பேரை ஏமாற்றிய பெண் கைது

செய்திப்பிரிவு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.5 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீ ஸார் கைது செய்தனர். அவரது மகனை தேடி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த 28 வயது பெண் கடந்த 20-ம் தேதி ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது ஒரு வெப்சைட்டில் வெளிநாட்டில் வேலை இருப்பது தெரியவந்தது. உடனே அதில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார்.

அதில் பேசிய நபர் அயர்லாந்து நாட்டில் நல்ல வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதற்காகஅந்த பெண்ணிடம் ரூ.3.5 லட்சம் பணம்பெற்றுள்ளார். பின்னர் அந்தபெண்ணை நேர்காணலுக்கு டெல்லிக்கு வருமாறு அழைத்தார்.

அதன்படி அந்த பெண்ணும் டெல்லிக்கு சென்றார். ஆனால் அங்கு விசாரித்தபோது அப்படி யாரும் அழைக்கவில்லை என தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், அந்த நபரை தொடர்பு கொண்டபோது அந்த நபர் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து அந்த பெண் புதுச்சேரி டிஜிபி மனோஜ்குமார் லாலிடம் புகார் அளித்தார். டிஜிபி உத்தரவின்பேரில் குற்ற புலனாய்வு எஸ்பி பழனிவேல் தலைமையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் கோயம்புத்தூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் கடந்த 3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த நாகம்மை என்ற பெண்ணை கைது செய்தனர்.

பின்னர் அவரை புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்ததில், போலி வேலைவாய்ப்பு வெப்சைட் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.45.5 லட்சம் வரை அவரும் அவரது மகன் பிரபாகரன் என்பவரும் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நாகம்மையிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள்,போலி முத்திரைகள், அரசாங்க ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அவரது மகன் பிரபாகரனை தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏற்கெனவே சென்னை, திருச்சியைச் சேர்ந்த 25 பேரை போலி விசா மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சீனியர் எஸ்பி நாரா சைன்யா கூறுகையில், ‘‘வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக ஏஜென்ட் அலுவலகத்தில் நேரடியாக பார்வையிட்டு, ஏற்கெனவே அந்த ஏஜென்ட் மூலமாக யாரேனும் வெளிநாட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்களா என்று உறுதி செய்த பிறகு வெளிநாடு செல்ல விண்ணப்பிக்க வேண்டும்’’ என்ற தெரிவித்தார்.

SCROLL FOR NEXT