சென்னை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நிர்மலா ராணி (59). இவர், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் ஜார்ஜ் டவுன் மற்றும் அண்ணா சாலை கிளை மேலாளராக 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
இவரது பணிக் காலத்தில், வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புத் தொகையை தன்னிச்சையாக முடித்து, அந்தத் தொகையை வங்கி கணக்கிலிருந்து, தனது பெயரிலான கர்நாடக வங்கிக் கணக்குக்கு மாற்றி ரூ.1.23 கோடி கையாடல் செய்ததாக பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் மண்டல மேலாளர் கன்வர்லால், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், மத்தியகுற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு கணக்கிலிருந்து ரூ.1.23கோடி கையாடல் நடைபெற்றது தெரியவந்தது.
நிர்மலா ராணி கையாடல் செய்தபணத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றி, அதிலிருந்து தனது கணவர் இளங்கோவன்(62) வங்கிக் கணக்கில் மாற்றம் செய்து,மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, வங்கி மேலாளராக இருந்த நிர்மலா ராணி, அவரது கணவர் இளங்கோவனை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைத்தனர். மோசடி புகாரில் சிக்கிய நிர்மலா ராணி ஏற்கெனவே பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.