கோவில்பட்டி அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பரமக்குடியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சில்லாங்குளத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 7,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 16 வயது மாணவி, விடுதியில் தங்கியிருந்து பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இப்பள்ளியில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பசுவந்தனை போலீஸார் விசாரித்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர். அவர்களுடன் பள்ளியில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் பெ.கீதாஜீவன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்படும். மாணவியின் கடிதம் ஒன்று காவல்துறை விசாரணையில் உள்ளது” என்றார்.
நேற்று மாலை 4 மணிக்கு மேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வழக்கு ஆவணங்களை பசுவந்தனை போலீஸார், சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று மாலையே சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் பள்ளிக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.