புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே வேலைக்கு சென்று திரும்பிய இளைஞரை வழிமறித்த 4 பேர் கொ்ணட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி நூதனமாக பணம் பறித்து சென்றனர்.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் உப்புகார வீதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கவர்த்தி(27). இவர் உறுவையாறு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் தீபன் சக்கரவர்த்தி வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது உறுவையாறு ரோடு ஆச்சார்யாபுரம் அருகேயேள்ள சங்கராபரணி ஆற்றங்கரையோரம் பைக்கை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு முகக்கவசம் அணிந்து வந்த 4 பேர் கும்பல் கத்தி முனையில் அவரை மிரட்டி இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று செல்போன், பர்ஸ், ஏடிஎம் கார்டு, வண்டிச் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளனர். மேலும் அக்கும்பல், சக்கரவர்த்தியின் பர்ஸில் இருந்த ரூ.410- ஐ எடுத்துக் கொண்டதுடன் கூகுள்பே வசதி இருக்கிறதா என்று கேட்டு, நண்பர்களிடம் விபத்தில் சிக்கிவிட்டதாக பேசி பணம்கேட்க சொல்லி மிரட்டியுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க வேறுவழியின்றி தீபன் சக்கரவர்த்தியும், நண்பர்களுக்கு போன் செய்து பணம் கேட்டுள்ளார். அதன்படி 3 நண்பர்கள் 8,000 ரூபாயை கூகுள்பே மூலம் அனுப்பி வைத்துள்ளனர். உடனே அந்த கும்பல் தீபன் சர்க்கவர்த்தியின் ஏடிஎம் கார்டு மற்றும் பாஸ்வேர்டை மிரட்டி வாங்கிக்கொண்டு, அங்கிருந்து இருவர் மட்டும் அருகிலுள்ள ஏடிஎம் சென்றுள்ளனர்.
மற்ற இருவர் தொடர்ந்து தீபன் சக்கரவர்த்தியை கத்தி முனையில் மிரட்டியபடி இருந்துள்ளனர். சிறது நேரத்தில் அந்த 2 பேரும் பணத்துடன் அங்கு வந்த பின்பு செல்போன், பர்ஸ், ஏடிஎம் கார்டு, வண்டிச்சாவியை தீபன் சக்கவர்த்தியிடம் கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். உயிர்தப்பிய தீபன் சக்கரவர்த்தி இச்சம்பவம் தொடர்பாக மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் இன்று அவர்கள் சிக்கினர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.