மதுரை மாவட்டம் மேலூரில் தனியார் நிறுவன இயக்குநர் வீட்டில் 95 பவுன் நகை, 40 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயின.
மேலூர் குமார் நகரைச் சேர்ந்தவர் பிரபு சங்கர்(45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராகப் பணிபுரிகிறார். இதனால் அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார்.
வீட்டின் மாடி பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், பிரபுசங்கரின் மாமனார் எம்.கே. பாலகிருஷ்ணன் நேற்று காலை ஓய்வு எடுக்க மருமகன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது தரைத்தள வீட்டின் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக் கிடந்தன.
இது குறித்து அவர் மேலூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த மேலூர் போலீஸார் விசாரணை செய்தனர்.
வீட்டின் பின் பகுதி ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 95 பவுன் நகை, 40 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.1.10 லட்சத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி திருட்டு நடந்த வீட்டை ஆய்வு செய்தார். தடயவியல், விரல் ரேகை நிபுணர்கள் பீரோ, கதவுகளில் பதிவான ரேகைகளை சேகரித்தனர்.
வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்டே இச்சம்பவம் நடந்திருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் தனிப்படையினர் திருடர்களை தேடிவருகிறனர்.