சென்னை: விழுப்புரம் அருகே கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பதுக்கி வைத்திருந்த 7 பழங்கால வெண்கல சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கன்னிகா கார்டனில் டி.ஆர்.கன்னியப்பன் என்பவர் மெட்டல் கிராஃப்ட்ஸ் என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இங்கு பழங்கால வெண்கல சிலைகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி டி.ஆர்.தினகரன், திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி கதிரேசன், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி தண்டாயுதபாணி, சிறப்பு டிஎஸ்பி மதிகுமார், ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட போலீஸார் கன்னியப்பனின் கடையில் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர்.
அங்கு பழங்கால வெண்கல சுவாமி சிலைகளை விற்பனைக்காக மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அர்த்தநாரீஸ்வரர், சிவகாமி தேவி, கிருஷ்ணர், புத்தர், மயில் வாகனம் உட்பட 7 வெண்கல சிலைகளை கைப்பற்றினர்.
இதுகுறித்து டி.ஆர்.கன்னியப்பன், அவரது மகன் டி.ஆர்.ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானவை என்பதை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.