புதுச்சேரி: புதுச்சேரியில் வாடகை வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த புரோக்கர் உள்ளிட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மோகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கோரிமேடு டிநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13-ம் தேதி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 பேரை பிடித்த போலீஸார், இளம்பெண் ஒருவரையும் மீட்டனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த புரோக்கர் பால்ராஜ் (எ) பாலாஜி, வாடிக்கையாளராக வந்திருந்த புதுச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் மீட்கப்பட்ட பெண் 16 வயது சிறுமி என்பதும், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரிந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமியை போலீஸார் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து புரோக்கர் பாலாஜி, பச்சையப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பாலியல் தொழில் நடந்த வீட்டில் சிக்கிய செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது 27 நபர்கள் வரை அச்சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அவர்களின் பட்டியலை சேகரித்த போலீஸார் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கையில் இறங்கினர். அதன்பேரில் நேற்று 12 பேரையும், இன்று 8 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த சுரேஷ், பிரேம்குமார், தாரா ராம், அருள்குமார், ரஞ்சித், ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார், பாலாஜி, சிலம்பரசன், சத்தியபாலன், சாரதி, சங்கர், மணிகண்டன், கவியரசன், வினோத்குமார், சசீந்திரன், சரவணன், ஜெகதீஷ், செல்வகணபதி, கடலூர் சேது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள புரோக்கர் பாலாஜியின் மனைவி உமா, சுபீந்திரன், கரிகாலன், ஜெகன், ராஜா ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர். மேலும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.