கைதான நவின். 
க்ரைம்

நகை, செல்போன் திருடிய ஆந்திர இளைஞர் கைது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: சென்னை அயனாவரம் குன்னூர் ஹைரோடு பகுதியில் வசிப்பவர் பிரதீஷ்பாபு(29). இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு கடந்த மாதம் சுற்றுலா வந்துள்ளார். ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளார்.

இதற்கு முன்பாக, வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அவரது காரில், தங்க மோதிரம், தங்க செயின், செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர், திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த நகை மற்றும் செல்போனை காணவில்லை.

இது குறித்து பிரதீஷ்பாபு கொடுத்த புகாரில் பேரில், திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்போன் எண்ணின் அடையாள எண்ணை பயன்படுத்தி விசாரணை நடத்தினர். அதில், ஆந்திர மாநிலம் நெல்லூர் வட்டம் நந்திகுந்தா என்ற பகுதியில் செல்போன் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் செல்போனை பயன்படுத்தியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், நெல்லூர் மாவட்டம் தத்தலூர் கேகேபி காலனியில் வசிக்கும் பால்ராஜ் மகன் நவின்(23) என்பவர் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நவினை நேற்று முன்தினம் கைது செய்த தனிப்படை காவல்துறையினர், அவரிடம் இருந்து செல்போன், அடகு வைக்கப்பட்டிருந்த 14 கிராம் எடையுள்ள செயின் மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT