க்ரைம்

தந்தையுடன் பள்ளிக்கு சென்றபோது விபத்து: ஆம்பூரில் பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் வீராங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி(45). இவரது மகள்கள் ஜெயஸ்ரீ (16), வர்ஷாஸ்ரீ (11) . இருவரும் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த மகள் 11-ம் வகுப்பும், இளைய மகள் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், தண்டபாணி நேற்று காலை 8 மணியளவில் தனது 2 மகள்களையும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

ஆம்பூரில் உள்ள மஜ்ருலூம் பள்ளி அருகே இரு சக்கர வாகனம் சென்ற போது, ஓசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தண்டபாணியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில், தண்டபாணி தனது இரு மகள்களுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதேநேரத்தில் லாரியில் இருந்த கன்டெய்னர் தனியாக கழண்டு மாணவிகள் 2 பேர் மீது விழுந்தது.

இதில், ஜெயஸ்ரீ, வர்ஷாஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த தண்டபாணியை மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர்.

இந்த தகவலறிந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில், ஆம்பூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த 2 மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அங்கு போக்குவரத்தை சீர் செய்தனர். இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி ஓட்டுநரான ஜெயசீலன் (29) என்பவரை கைது செய்தனர்.

இதற்கிடையே, சாலை விபத்தில் மாணவிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் வட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் ஆம்பூர் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தண்டபாணிக்கு ஆறுதல் கூறினர்.

தந்தையுடன் பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT