சக மாணவி தாயார் சகாயராணி விக்டோரியா 
க்ரைம்

காரைக்கால் மாணவர் கொலை வழக்கு: குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்ததாக சக மாணவியின் தாய் வாக்குமூலம்

வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தைக் குடித்த பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், குளிர்பானத்தில் எலி பேஸ்டை கலந்து கொடுத்ததாக, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா வாக்கு மூலம் அளித்துள்ளார்.

காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் பால மணிகண்டன்(13), படிப்பில் ஏற்பட்ட போட்டிக் காரணமாக சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா என்பவரால் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர்பானத்தைக் குடித்ததால், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 3-ம் தேதி இரவு உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் லட்சியப் போக்கே மாணவர் உயிரிழப்புக்குக் காரணம் என பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சகாயராணி விக்டோரியாவை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் நேற்று (செப்.13) மதியம் சகாயராணி விக்டோரியாவை போலீஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் இன்று (செப்.14) மதியம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

உயிரிழந்த சிறுவன் பால மணிகண்டன்

விசாரணையின் போது சகாயராணி விக்டோரியா கூறியதாக போலீஸார் தரப்பில் கூறப்படுவது: "எனது மகளுக்கு போட்டியாக இருந்தது குறித்தும், அன்று நடக்கிவிருந்த ஆண்டு விழாவில் மகளுக்கு பரிசு கிடைக்காது என்பது குறித்தும் மகள் மனம் நோகி தெரிவித்தார். அன்றைய ஆண்டு விழாவில் பால மணிகண்டன் பங்கேற்று பரிசு வாங்கிவிடக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறு செய்தேன். இடையூறு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முதலில் பேதி மாத்திரை வாங்கி வந்தேன். பின்னர் மனம் மாறி காமராஜர் சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையிலிருந்து எலி பேஸ்ட் வாங்கி வந்து, எனது வீட்டின் கொல்லைப் புறத்தில் இரண்டு குளிர்பான பாட்டில்களில் அதனைக் கலந்து எடுத்துச் சென்று, பள்ளிக் காவலாளியிடம் பால மணிகண்டனின் தாயார் கொடுத்ததாகக் கூறி கொடுத்துவிட்டு வந்தேன்" என்று சகாயராணி கூறியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காமராஜர் சாலையில் உள்ள விக்டோரியாவின் வீட்டுக்கு அவரை போலீஸார் அழைத்துச் சென்று, குளிர் பானத்தில் விஷம் கலந்தது குறித்து செய்து காட்டச் சொல்லி வீடியோ பதிவு செய்தனர். எலி பேஸ்ட் கலந்தது குறித்து முன்னரே போலீஸார் விசாரணையில் தெரிவித்திருந்தால் ஒருவேளை அம்மாணவனை காப்பாற்றியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT