தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் 
க்ரைம்

பாலியல் குற்ற வழக்குகளை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள்: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை

செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கண் காணிக்க சிறப்புக் குழுக்களை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அமைத்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை களைத் தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கிறது. முக்கியமாக போக்ஸோவில் பதிவாகும் வழக்குகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

போக்ஸோ வழக்கு விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலருக்கு உடன் இருந்து உதவ குழந்தைகள் நலக் குழுமத்திடம் இருந்து ஒரு நபரை வேண்டி பெறுதல், அரசின் இடைக்கால நிவாரணம் பெறுதல்,

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்தல், பாலியல் குற்றங்களை தடுக்க கல்வி நிறுவனங்கள், இதர பணியிடங்களில் விழிப்பு ணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.

இவற்றின் அடுத்தகட்ட நகர்வாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர், புகார்தாரர்களின் மொபைல் போனுக்கு வாட்ஸ் ஆப் , குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் முறை தென்மண்டலத்தில் முதல் முறையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியதாவது: குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் தங்கள் வழக்கின் போக்கினை அறிந்து கொள்ளலாம். இந்த புதிய முயற்சியால் வழக்குகளின் தண்டனை விகிதமும் அதிகரிக்கும். குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அச்சம் ஏற்படும்.

போக்ஸோ குற்றங்களும் குறையும் வாய்ப்பு ள்ளது. இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வரும் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பிக்கள் சரவணன் (நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), பாலாஜி (தூத்துக்குடி), ஹரிகிரன் பிரசாத் (கன்னியாகுமரி) ஆகியோரை பாராட்டுகிறேன்.

அடுத்த கட்டமாக மதுரை, திண்டுக்கல் , தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT