சென்னை: விழுப்புரத்திலிருந்து பிரான்ஸுக்கு சட்ட விரோதமாகக் கடத்த முயன்ற சுவாமி சிலைகள் உட்பட 20 பழங்கால கலைப் பொருட்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பழங்கால கலைப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தமிழக காவல் துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆர்.தினகரன் ஆகியோர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி, ஆய்வாளர் இந்திரா, உதவி ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு பிரான்ஸ் நாட்டுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பழமையான 13 கற்சிலைகள், 4 உலோக சிலைகள், ஒரு மரக் கலைப்பொருள், ஒரு ஓவியம் உட்பட 20 கலைப் பொருட்களைக் கைப்பற்றினர்.
இந்த கலைப் பொருட்களை பிரெஞ்சு நாட்டவர் ஒருவர், பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்தியாவின் பழங்கால கலைப்பொருட்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்ததைத் தடுத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார்.
கைப்பற்றப்பட்ட சிலைகள்: உலோக விநாயகர் சிலை, கிருஷ்ணர் ஓவியம், டொமினிக் கார்டனில் இருந்து நடனமாடும் அப்சரா மரம், பெரிய பிள்ளையார், நடுத்தர பிள்ளையார், சிறிய பிள்ளையார், பெரிய புத்தர் சிலை, நடனம் ஆடும் அப்சரா சிலை, விஷ்ணு கற்சிலை, பார்வதி கற்சிலை, ஐயப்பன் கற்சிலை சிறியது, ஐயப்பன் கற்சிலை பெரியது, நந்தி கற்சிலை, கையில் கத்தியுடன் கற்சிலை, டெரகோட்டா புத்தர் சிலை (தலை மட்டும்), உறையுடன் கூடிய வெண்கல சொம்பு, வெண்கல சொம்பு, மயில் விளக்கு, அனுமன் சிலை, முருகன் சிலை ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.