சென்னை: சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மேலும் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் கடந்த 8-ம் தேதி அதிகாலை, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி 3 பேர் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், பைக் ரேஸில் ஈடுபட்டது திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஷ் மற்றும் முகமது ஷாய்பான் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை 11-ம் தேதி கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மாலிக், இம்ரான் அலிகான், முகேஷ் ஆகிய 3 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.