க்ரைம்

கல்லால் அடித்து பெண் கொலை: ஊதியூர் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

ஊதியூர் அருகே நிழலி கிராமம் வஞ்சிபாளையம், கரியக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தனசாமி. இவரது மனைவி ரேவதி (35). வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவன வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர், வேலை முடிந்ததும் காட்டுப்பாதை வழியாக தனது வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப கிளம்பியவர், அதன்பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

ரேவதியின் கணவர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ரேவதியை தேடி சென்றனர். அப்போது காட்டுப்பாதையில் கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் அவரது செருப்பு கிடந்துள்ளது. இதையடுத்து பிஏபி கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு முட்புதர் அருகே ரேவதி சடலமாக கிடப்பதை உறவினர்கள் கண்டனர்.

உறவினர்கள் அளித்த தகவலின்பேரில் ஊதியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கல்லால் அடித்து ரேவதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT