க்ரைம்

சென்னை | உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோவில் கொண்டுவந்த 20 கிலோ நகைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோவில் கொண்டுவந்த 20 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 இளைஞர்களிடம் விசாரணை நடக்கிறது.

சென்னை எழும்பூர் லாங்ஸ் தோட்டம் ரவுண்டானாவில் போலீஸார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பார்சல் பெட்டிகளுடன் வந்த ஆட்டோவை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அதில் 13 பார்சல்கள் இருந்தன.

இதுகுறித்து ஆட்டோவில் இருந்த பரத் லால் (26), ராகுல் (21) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் சென்னை சவுகார்பேட்டையில் குல்தீப் சைனி (26)என்பவர் நடத்தும் பார்சல் சர்வீஸில் வேலை செய்பவர்கள்.

மும்பையில் இருந்து விமானம்மூலம் சென்னை வந்த 13 பார்சல்களையும் சவுகார்பேட்டையில் உள்ள பார்சல் அலுவலகத்துக்கு கொண்டு செல்கின்றனர் என விசாரணையில் தெரிந்தது. அதை பிரித்து பார்த்ததில், 20 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

ஆனால், உரியஆவணங்கள் ஏதும் இல்லாததால், அந்த நகைகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT