பெரம்பலூர்: அரசலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்வில் நேரிட்ட வெடி விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, தீயில் பற்றவைத்து மேல்நோக்கி வீசப்பட்ட ராக்கெட் வெடி ஒன்று கீழ் நோக்கி திரும்பி பக்தர்கள் கூட்டத்தில் விழுந்தது. இதில், அரசலூரைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் லலித் கிஷோர் (7)தலையில் வெடி விழுந்து வெடித்ததில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், திருச்சி மாவட்டம்சிக்கத்தம்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ்(36), துறையூரை அடுத்த சோபனாபுரத்தைச் சேர்ந்த சரவணன் மனைவி பிரியா(21) ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிறுவன் லலித் கிஷோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து, வெடி விபத்தில் காயமடைந்த பிரியா அளித்த புகாரின்பேரில், விழாவில் வெடி வெடித்தவர்களான அரசலூரைச் சேர்ந்த நீலகண்டன்(27), மணிகண்டன்(34) மற்றும் விழாக் குழுவினர் தேவராஜ்(50), கனகராஜ்(48),ராமலிங்கம்(66), கோவிந்தசாமி(42) ஆகியோரை அரும்பாவூர் போலீஸார் கைது செய்தனர். மேலும், விழாக் குழுவைச் சேர்ந்தஅஜித்குமார், ராஜா மற்றும் மங்கூன்கிராமத்தைச் சேர்ந்த வெடி தயாரிப்பாளர் பழனி(44) ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.