க்ரைம்

வேலூர் | மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முறைகேடு வழக்கில் இளம்பெண் கைது

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணை, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.

அதில், மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் போலி மருத்துவச் சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பூபதிராஜா விசாரணை மேற்கொண்டார். மேலும், முறைகேட்டில் தொடர்புடைய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக போலி சான்றிதழ்கள் மூலம் தேசிய அடையாள அட்டை பெற்ற குடியாத்தம் லட்சுமணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணையும், போலி சான்றிதழ் மூலம் பலருக்கு அடையாள அட்டை வாங்கிக் கொடுத்த வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்த தினகரன், காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த ஆவின் பாஸ்கர் ஆகிய 3 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இதில், ஆவின் பாஸ்கர் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கே.வி.குப்பம் வட்டம் பனமடங்கி அடுத்த மாளியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலா (32) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள்நேற்று கைது செய்துள்ளனர்.

இவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க உறுப்பினராக இருப்பதுடன் தினகரனுடன் சேர்ந்துக்கொண்டு போலி சான்றிதழ் மூலம் பலருக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வாங்கிக் கொடுத்துள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலிச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT