க்ரைம்

ராணிப்பேட்டை | லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: வாலாஜா அருகே லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கங்கோஜிராவ் (26). இவர்,கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி குடிபோதையில் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்ற லாரி ஓட்டுநரிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, விக்னேஷ் மறுநாள் கங்கோஜிராவின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது, வீட்டிலிருந்த கங்கோஜிராவின் தாய் ராணி (55), வீடு வந்து நியாயம் கேட்டு தகராறு செய்கிறாயா? என கேட்டு அருகில் இருந்த கட்டையை எடுத்து விக்னேஷை பலமாக தாக்கியுள்ளார்.

மேலும், கங்கோஜிராவ் கத்தியால் விக்னேஷை குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்த வாலாஜா காவல் துறையினர் ராணி மற்றும் கங்கோஜிராவ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கங்கோஜிராவ் (26) மற்றும் ராணி (55) ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, இருவரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT