காரைக்கால்: காரைக்காலில் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர் பால மணிகண்டன் (13). படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா என்பவரால் விஷம் கலந்துகொடுக்கப்பட்ட குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்ததால், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செப்.3-ம் தேதி இரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக காரைக்கால் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சகாயராணி விக்டோரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, மாணவர் உயிரிழந்த சம்பவத்தின்போதே காரைக்கால் நேரு நகர் வேட்டைக்காரன் வீதியில் உள்ள சகாயராணி விக்டோரியாவின் வீட்டை அவரது குடும்பத்தினர் பூட்டிவிட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த வீட்டுக்கு வந்த சிலர், வீட்டின் சுற்றுச்சுவர், கதவு, வீட்டின் முன்பக்க மாடிப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவர், சுற்றுச்சுவரின் உள்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், வீட்டுக்குள் இருந்த மின்விசிறிகள், டிவி, தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.