திருப்பத்தூர்: சிவகங்கை அருகே திருப்பத்தூர் கான்பா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரஞ்சிதம் (52).தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கணவர் இறந்தநிலையில் தனியாக வசித்து வந்தார்.
இவரது மகள் அபிமதிபாரதி திருமணமாகி பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் வங்கியில் பணியாற்றுகிறார். மகன் அம்பேத்பாரதி கோவையில் படித்து வருகிறார்.
நேற்று காலை 9.30 மணி வரை ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால் சக ஆசிரியர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவில்லை. பள்ளிச் சாவி ரஞ்சிதத்திடம் இருந்ததால் அதை வாங்குவதற்காக அவரது வீட்டுக்கு ஆசிரியர்கள் இந்திராணி, ரோஸ்லின் சென்றனர்.
கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே ரஞ்சிதம் ரத்தத்துடன் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பீரோவும் திறந்து கிடந்தது.
ரஞ்சிதத்தை அவரது வலது கை மற்றும் குதிகால் நரம்புகளைத் துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். தகவலறிந்த போலீஸார்,உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எடுத்துச் சென்றதால் அருகிலுள்ள பெட்ரோல் பங்க், வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.