கோவையில் வங்கியில் ஒப்படைக்கப்பட்ட கடன் அட்டைகளை (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி மோசடி செய்த வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் அட்டை வாங்கி இருந்தார். பின்னர் அதை சில மாதங்கள் பயன்படுத்திவிட்டு, அதற்கான முழு தொகையை கட்டிய பின்னர் வங்கியில் திரும்ப ஒப்படைத்துவிட்டார்.
அந்த வங்கியில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியரான இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்(32) என்பவரிடம் ஒப்படைத்த செல்வராஜ், அதற்கான ஒப்புதல் ரசீதையும் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் அவர் பயன்படுத்திய அட்டையின் கணக்கில் இருந்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நகைக்கடைகளில் ரூ.1 லட்சம் மதிப்பில் நகைகள் வாங்கியதாக வங்கியில் இருந்து செல்வராஜிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த செல்வராஜ், மாநகர சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வங்கியில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் சுரேஷ், வாடிக்கையாளர் செல்வராஜ் திரும்ப ஒப்படைத்த கடன் அட்டையைப் பயன்படுத்தி நகையை வாங்கி, வேலாண்டிபாளையத்தில் உள்ள மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுரேஷ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.