வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் டி.வி.ஆர்.மனோகர். இவர், வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆக.17-ம் தேதி மனோகரின் நிறுவனத்துக்குள் நுழைந்த 4 பேர், அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பானு என்கிற மகேஸ்வரன் உட்பட 10 பேர் சேர்ந்து, தன் தம்பி மனோகரை கொலை செய்துவிட்டதாக மனோகரின் அண்ணன் ரமேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், மனோகர் கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் காரைக்கால் பகுதியில் காரில் சுற்றிக்கொண்டிருப்பதாக நாகை மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் காரைக்காலுக்கு விரைந்தனர்.
அங்கு, அம்பகரத்தூரில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் சேத்தூர் அருகே வந்த காரை, தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, அந்த கார் அங்கிருந்து தப்பிச் சென்றது.
பின்னர், திருநள்ளாறு சாலையில் வந்தபோது, அந்த காரை காரைக்கால் போக்குவரத்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, காரில் இருந்த நபர் வேளாங்கண்ணி நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என நாகை தனிப்படை போலீஸார் தெரிவித்ததால், அவர்களிடம் அந்த நபரை ஒப்படைத்த காரைக்கால் போலீஸார், காரை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த நபரிடம் நாகை தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மனோகர் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பானு என்ற மகேஸ்வரன்(41) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.