மதுரை மாவட்டம் அலங்காநல் லூரைச் சேர்ந்தவர் சோனைமுத்து (37). கோவையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வஉசி மைதானம் அருகே வந்தபோது, காரில் வந்த 3 பேர் கத்தியால் குத்தி காரில் கடத்திச் சென்றனர். ஆத்துப்பாலம் சிக்னல் அருகே கார் வந்தபோது, சோனைமுத்து கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் காரை மறித்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காரில் வந்த மூவரும் தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக, சோனை முத்து அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கோவை சுகுணாபுரத்தைச் சேர்ந்த சல்மான் பாரிஸ்(23), அவரது நண்பர்களான மதுக்கரை மார்க்கெட்டைச் சேர்ந்த அக்பர்சாதிக்(26), கோட்டைமேட்டைச் சேர்ந்த முகமது அஸ்கர்(24) ஆகியோர் எனத் தெரியவந்தது. மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
காவல்துறையினர் கூறும்போது, “சோனைமுத்து தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியருடன் நட்பில் இருந்துள்ளார்.
இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு திருமணமானது. வேறொரு நிறுவனத்துக்கு மாறிய சோனைமுத்து, அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். இதை அறிந்த பெண்ணின் கணவரான சல்மான் பாரிஸ்,சோனைமுத்துவை தொடர்புகொண்டு வஉசி மைதானம் அருகே வரவழைத்துள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சல்மான் பாரிசும், நண்பர்களும் சேர்ந்து கத்தியால் குத்தி சோனைமுத்துவை காரில் கடத்தியுள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.