கோவை பீளமேடு, ஆவாரம் பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மாநகரகாவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து, பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: பீளமேடு ஆவாரம்பாளையம் சாலை துரைசாமி லேஅவுட்டில் சரவணகுமார் வேலு(53), அவரது மனைவி, மகன் உள்பட 7 பேர் கூட்டாக சேர்ந்து ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர். ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.10 லட்சம் என வெவ்வேறு அளவுகளில் வைப்புத்தொகையும் பெற்று வந்தனர்.
மாதம்தோறும் ரூ.8 ஆயிரம் என வைப்புத் தொகைக்கு ஏற்ப ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். இதை நம்பி முதலீடு செய்தோம்.
இந்நிலையில், முதிர்வடைந்த தொகையை கொடுக்காமலும், வைப்புத் தொகையை திரும்பகொடுக்காமலும் சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு சரவணகுமார் வேலு மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
175 பேரிடம் ரூ.5 கோடிக்கு மேல் பணத்தை வசூலித்து மோசடி செய்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.