நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக வங்கிகளில் பணம் எடுப்பவர்களைக் குறிவைத்துத் தாக்கி கொள்ளையடித்து வந்த தம்பதி உட்பட 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம், வேட்டைக்காரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொள்ளை நடைபெறுவதாக வேதாரண்யம் போலீஸாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல், இன்ஸ்பெக்டர் பசுபதி, தனிப்படை சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலம், துரைராஜ் மற்றும் போலீஸார், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வேட்டைக்காரனிருப்பு அருகில் உள்ள புதுப்பள்ளியில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை கூறினர். இதையடுத்து, அவர்களை வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த குண்டு கார்த்திக்(33), அவரது மனைவி காயத்ரி(32), காயத்ரியின் தந்தை கணேசன்(60) என்பதும், அப்பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பவர்களைத் தாக்கி பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.