க்ரைம்

ஒரே நாளில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: போக்ஸோ சட்டத்தில் குன்னூரில் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ராஜன் (26) என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இருவீட்டாரும் பேசி திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் அளித்த புகாரின்பேரில், பிரசன்ன தேவி தலைமையிலான மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், இருவீட்டாரின் பெற்றோரிடம் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

அதன்பின்னர், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை திருமணம் செய்யமாட்டோம் என பெற்றோர் ஒப்புதல் கடிதம் அளித்தனர். இதேபோல, நடுவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற இருந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

குன்னூர் அருகே உலிக்கல் பகுதியை சேர்ந்தவர் காட்வின் (22). இவர், கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காட்வினுக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பெற்றோர் கேட்டுள்ளனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக சிறுமி கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவ பரிசோதனையில், 7 மாத கர்ப்பமாக சிறுமி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காட்வின் மற்றும் சிறுமியின் பெற்றோர் கூடி பேசி, திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் காட்வின் கைது செய்யப்பட்டார். குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமிக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT