க்ரைம்

திருச்சி பெரிய சூரியூர் காட்டுப் பகுதியில் ரவுடிகள் மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

செய்திப்பிரிவு

திருச்சி பெரிய சூரியூர் காட்டுப் பகுதியில் ரவுடிகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அவர்களைப் பிடிக்கச் சென்ற பொதுமக்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

திருச்சி- புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர், நவல்பட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக சூதாட்ட கிளப்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் ஏற்பட்டுள்ள முன்விரோதத்தில் கொலைச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் திருச்சி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸார் ஏற்கெனவே உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், திருச்சி நவல்பட்டு பெரிய சூரியூர் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு சூதாட்ட கிளப்பில் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில், திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பப்லு நேற்று தனது கூட்டாளிகளுடன் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் அங்கு சென்றுள்ளார். இதையறிந்த கிளப் நிர்வாகிகள் தரப்பைச் சேர்ந்த ரவுடிகள், ரவுடி பப்லு கும்பலை வழிமறித்துள்ளனர்.

இதில், இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். அப்போது, பப்லு தரப்பினர் காரில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து எதிர்தரப்பினர் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

வெடிகுண்டு சத்தத்தைக் கேட்ட பெரிய சூரியூர் இளைஞர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். இதைக் கண்ட பப்லு தரப்பினர் கைத் துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டினர். பின்னர், இருதரப்பினரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், ரவுடி பப்லு தரப்பைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கிக்கொண்டார்.

இதையறிந்த நவல்பட்டு, மாத்தூர் போலீஸார் அங்கு சென்று, பொதுமக்களின் பிடியில் இருந்த ரவுடியை மீட்டு, தகராறு நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், எஸ்.பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இச்சம்பவத்தில் காயமடைந்த நவல்பட்டு ரவுடி தீன் உள்ளிட்ட 3 பேர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த போலீஸார் அங்கு சென்று, அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT