ஆம்பூர்: ஆம்பூரில் முகமூடி நபர் மிரட்டியதால் மாடியில் இருந்து கீழே குதித்த பெண் கொடுத்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடம் டவர் தெருவைச் சேர்ந்தவர் மதன், தாமரைச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதன் கார் ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல் மதன் நேற்று முன்தினம் வெளியூர் சென்ற நிலையில் மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த தாமரைச்செல்வி வீட்டின் மேல் மாடியில் துணி காயவைக்க சென்றுள்ளார். அப்போது, வீட்டின் மாடிக்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் தாமரைச்செல்வியிடம் கத்தியை காட்டி நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார். செய்வதறியாது தவித்த தாமரைச்செல்வி திடீரென 20 அடி உயர மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தாமரைச்செல்வியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.