ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாநகர காவல்துறையில் வடக்கு பகுதி துணை ஆணையராக பாரிஸ் தேஷ்முக் பதவி வகிக்கிறார். இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை சாதாரண உடையில் போக்குவரத்து நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகியோரும் சாதாரண உடையில் இருந்தனர்.
ரோட்டரி சர்க்கிள் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட் டிருந்த 4 போலீஸார் அவரது காரை நிறுத்தினர்.
இதையடுத்து காரில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் செலுத்த வேண்டும் என ராஜேந்திர பிரசாத் என்ற கான்ஸ்டபிள் கூறியுள்ளார். பிறகு அவர் அபராதம் செலுத்த தேவையில்லை. ரூ.500 கொடுத்து விட்டு அங்கிருந்து செல்லலாம் என கூறியுள்ளார்.
வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை சோதிக்கவே தேஷ்முக் சாதாரண உடையில் வந்துள்ளார். என்றாலும் கான்ஸ்டபிள் ராஜேந்திர பிரசாத் துறை உயரதிகாரியான தேஷ்முக்கை அடையாளம் காணாமல் லஞ்சம் கேட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கான்ஸ்டபிள் ராஜேந்திர பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மற்ற 3 போலீஸார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.