சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் உள்ள 5 கடைகளின் பூட்டுகளை உடைத்து அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை அண்ணா சாலை, ரிச்சி தெருவில் 1500-க்கும் மேற்பட்ட செல்போன், கணினி மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதனால் எப்போதும் அப்பகுதி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரிச்சி தெருவில் தொடர்ச்சியாக 5 செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளின் பூட்டுகளை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப், ஹெட்போன் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடைகளில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கடைகளை நோட்டமிடுவதும், அவர்களில் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடுவதும், மற்ற இருவர் வெளியில் நின்று காவல் காப்பதும் பதிவாகி உள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையாளங்களை வைத்து போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.