திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தில் வசித்தவர் சின்னதம்பி மனைவி காசியம்மாள்(85). இவர், குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தை பராமரித்து கொண்டு, அதே பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர், ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது நேற்று காலை தெரியவந்தது. அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 1 பவுன் நகையை காணவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்று காவல் துறையினர், காசியம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.