உதகை அருகே தொட்டபெட்டா சிகரத்திலிருந்து குதித்து பெண் சுற்றுலா பயணி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
உதகை அருகே தொட்டபெட்டா மலை சிகரத்திலிருந்து இயற்கை காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி சென்ற பெண், பாறை மீது நின்று கீழே பள்ளத்தாக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அங்கிருந்தவர்கள், அப்பெண்ணை பாதுகாப்பான பகுதிக்கு வருமாறு அறிவுறுத்தினர். ஆனால், திடீரென அப்பெண் பள்ளத்தாக்கில் குதித்தார். இந்த காட்சி அங்கிருந்த சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோவில் பதிவானது. பள்ளத்தாக்கில் குதிக்க முற்பட்ட பெண்ணை, வேண்டாம் என அங்கிருந்தவர்கள் கூச்சலிடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தொட்டபெட்டா சிகரத்திலிருந்த குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண், கோவைதடாகம் பகுதியை சேர்ந்த லீலாவதி (62) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பவஇடத்துக்கு தீயணைப்பு மீட்புக் குழுவினர் சென்று, சடலத்தை மீட்டு உதகை அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக தேனாடுகம்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸார் கூறும்போது, "கோவை தடாகம் பகுதியை சேர்ந்தநல்லதம்பி, குடும்பத்துடன் தொட்டபெட்டாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இவரது மனைவி லீலாவதி(62), பாறையில் நின்றுகொண்டிருந்த நிலையில், திடீரென மலையில் இருந்து குதித்துள்ளார். பாறை இடுக்குகளில் சிக்கிபடுகாயமடைந்த அவர், அங்கேயே உயிரிழந்துள்ளார்.
எதற்காக தற்கொலை செய்து கொண்டார்என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.