க்ரைம்

சென்னையில் ரகசிய குறியீடு வைத்து குட்கா விற்ற 3 பேர் கைது; 130 கிலோ பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை அடையாறு சுற்றுவட்டார பகுதிகளில் சிறு கடைகளுக்கு குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் விநியோகம் செய்வதாக அடையாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அடையாறு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கொடுங்கையூரை சேர்ந்த வரதராஜன்(38) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அடையாறு காந்தி ரோடு 4-வது பிரதான சாலையில் நின்றிருந்த காரை போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் குட்கா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த செல்லப்பா(53), சஞ்சய்(19) ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "செல்லப்பா பெங்களூரில் இருந்து காய்கறி ஏற்றிவரும் வாகனம் மூலம் குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து,கொடுங்கையூரில் உள்ள கிடங்கில் பதுக்கி வைத்து சென்னையில் பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்துள்ளார். மேலும், ரகசியகுறியீட்டை கூறுபவர்களுக்குதான் அவர்கள் குட்கா விற்பனை செய்கின்றனர்.

குட்காவுக்கு 'மஞ்சள்' என்றும், புகையிலைக்கு 'சுண்ணாம்பு' என்றும் ரகசிய குறியீட்டை வைத்துள்ளனர்" என்றனர். இதையடுத்து செல்லப்பாவின் கிடங்கில் இருந்த 130 கிலோ குட்காமற்றும் அவரது காரை பறிமுதல் செய்து, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SCROLL FOR NEXT