திருவள்ளூர்: தடை செய்யப்பட்ட அமைப்பின் சமூக வலைதள பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்த சென்னை இளைஞர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது (26). இவர் கடந்த 6 மாதங்களாக, திருவள்ளூர் லங்காகார தெருவில் உள்ள தன் மாமனார் வீட்டில் தங்கி காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இவரது செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் அதிகாலை திருவள்ளூர் வந்த சென்னை குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவு போலீஸார் ராஜாமுகமதுவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் அவர் திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் அவரிடம் மணவாளநகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சுமார் 18 மணி நேரம் திருவள்ளூர் டவுன் போலீஸார், தேசிய புலனாய்வு முகமை மற்றும் இந்திய உளவு அமைப்பான, ‘ரா’ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், ராஜாமுகமது தடைசெய்யப்பட்ட அமைப்பின் சமூக வலைதள பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததும் குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தியும் மற்ற மதங்களை தாழ்வாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவருடன் சிக்னல் என்ற செயலியில் பேசியதும் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் டவுன் போலீஸார், ராஜாமுகமதுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தொடர்ந்து, அவர் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிபதியின் உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.