ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வயதான தம்பதி கொலை வழக்கில் 7 தனிப் படையினர் இதுவரை நூறுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் போலீஸார் தவித்து வருகின்றனர்.
தெற்கு வைத்தியநாதபுரம் தெருவைச் சேர்ந்த ராஜகோபால்(75), அவரது மனைவி குருபாக்கியம்(68) ஆகியோர் ஜூலை 16-ம் தேதி இரவு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டு, வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
ராஜகோபால் பல பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். வீட்டில் இருந்த கடன் கொடுத்த ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இந்த கொலை தொடர்பாக ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. போலீஸார் ராஜகோபால் வீட்டில் வேலை செய்தவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், அருகில் வசிப்பவர்கள் என நூறுக்கும் மேற்பட்டோரிடம் விசாரனை நடத்தியும் குற்றவாளிகள் குறித்து எந்தத் தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.
இதேபோல் ஜூலை 18-ம் தேதி ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதிகளான சங்கரபாண்டியன், ஜோதிமணி ஆகியோரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 11 தனிப் படைகள் அமைக்கப்பட்டும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க தென் மண்டல ஐ.ஜி. நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகள், பழைய குற்றவாளிகள் விவரங்களை சேகரித்து விசாரனணயை தொடங்கி உள்ளனர்.