க்ரைம்

ராயப்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ராயப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலை, துலுக்கானம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (41). ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு 11.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகில் நிறுத்திவைத்து விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வாகனத்தை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்துவிசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ராயப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் பல இருசக்கர வாகனங்களை திருடியுள்ளதும், ஏற்கெனவே திருட்டு மற்றும் செயின் பறிப்பு உட்பட 8 வழக்குகள் இவர் மீது உள்ளதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மணிகண்டன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT