மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(60). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி இரவு மனைவியை மோட்டார் சைக்கிளில், வயலில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர், மீண்டும் வயல்வெளிக்கு திரும்பினார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பிவில்லை. இதனால், உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். பின்னர், வயல்வெளிக்கு அருகில் உள்ள முட்புதரில் தலையில் காயங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக, மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். மேலும், குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.