க்ரைம்

மதுரை | மேலூரில் சொத்துமதிப்பு சான்றிதழ் வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: துணை வட்டாட்சியர், இடைத்தரகர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: மேலூர் கருத்தப்புலியன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி மாலதி. இவருடைய பெயரில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொத்து உள்ளது.

இதற்கான சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இச்சான்றிதழ் வழங்க மேலூர் துணை வட்டாட்சியர் மணிகண்டன் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சப் பணம் கொடுக்க விரும்பாத பிரபு மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயனம் தடயவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸார் அவரிடம் கொடுத்து அனுப்பினர்.

மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற பிரபு துணை வட்டாட்சியர் மணிகண்டனிடம் பணத்தை கொடுக்க முற்பட்ட போது, இடைதரகரான மூக்கனிடம் வழங்குமாறு கூறியுள்ளார். இதன்படி, அருகில் நின்றிருந்த மூக்கனிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்தபோது, பக்கத்தில் மறைந்திருந்த மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்யசீலன் தலைமையிலான போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

மூக்கனுடன் மணிகண்டனும் கைது செய்யப்பட்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் டி.எஸ்.பி சத்யசீலன் மற்றும் ஆய்வாளர் ரமேஷ்பிரபு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலூரில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT