தேனி: தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனடிப்படையில், கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்தும் சொத்துக்கள், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
இது மட்டுமின்றி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் சில வரையறுக்கப்பட்ட மருந்துகளை போதைக்காக சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்பவர்கள்மீதும் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தனிப்படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைக்கென பயன்படுத்தும் ஊக்க மருந்துகளை பேருந்தில் கடத்துவது குறித்த தகவல் அறிந்து தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் தேனி உத்தமபாளையம் சேக் அபுதாகீர் மகன் முகமது மீரான் (22), அழகு முத்து மகன் மாணிக்கம் (19) ஆகியோரை கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மருத்துவத்துறையில் வரைமுறைப்படுத்தப்பட்டு, மருத்துவரின் பரிந்துரை பேரில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஊக்க மருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலம் பயன்படுத்தி அதிக லாபத்திற்கு இளைஞர்களிடம் விற்பது தெரியவந்தது. மேலும், இம்மருந்தை தேனி சின்னமனூரைச் சேர்ந்த சந்தானம் மகன் தங்கேசுவரன், காமாட்சிபுரம் பழனிச்சாமி மகன் சரவணக்குமார் மூலம் அறிமுகமான திருச்சி கருமண்டபம் ஜவகர் மகன் ஜோனத்தன்மார்க் என்பவரிடம் இருந்து வாங்கியதும், அந்த ஊசி மருந்து அனுமதியின்றி கடத்தியதும் தெரியவந்தது.
ஜோனத்தன்மார்க்கிடம் வலைதளம் மூலம் ஊக்க மருந்தை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை கூகுள்பே மூலம் செலுத்திய பிறகே பேருந்துகளில் உறவினர்கள் மூலம் ஊக்க மருந்தை கொடுத்து அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து ஜோனத்தன்மார்க் (30), முத்துமீரான் உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மில்லி லிட்டர் கொண்ட 11 ஊக்க மருந்து பாட்டில்கள், ஊசிகள் மற்றும் தங்கேசுவரனுக்கு சொந்தமான பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியது: ஊக்க மருந்து விற்ற ஜோனத்தன்மார்க் பொறியியல் பட்டதாரி. இவர் பிலாலி (FiZZli) பார்மா என்ற பெயரில் திருச்சியில் தனியார் நிறுவனம் நடத்துகிறார். இதன்மூலம் மதுரையிலுள்ள ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து ‘கிரீன்’ என்ற ரகசிய குறியீட்டின் மூலம் ஓர் ஊக்க மருந்தும், சென்னையிலுள்ள மருந்து நிறுவனம் ஒன்றிடமிருந்து‘ பின்ங் ’ என்ற ரகசிய குறியீட்டின்படி மற்றொரு ஊக்க மருந்தும், பூனேவிலுள்ள மருந்து நிறுவனம் மூலம் ‘ஆரஞ்ச்’ என்ற குறியீட்டின் மூலம் ஒரு ஊக்க மருந்தும் போதைக்காக விற்பனை செய்ய, மொத்த கொள்முதல் செய்து, தமிழகத்தில் சென்னை, ஓசூர், தேனி, கோவை, திருப்பூர் சிவகங்க, கரூர், சேலம் , திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங் கள் மட்டுமின்றி கேரளா பாலக்காடு, திருவனந்தபுரம், மலப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மொத்த விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
ஜோனத்தன்மார்க்கிடம் இருந்து வரையறைக்கு உட் படுத்தப்பட்ட மருந்து பாட்டிகள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜோனத்தன்மார்க்கிற்கு புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சேர்ந்த பெண் உதவியாளராக இருந்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோனத்தன்மார்க்கின் 3 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினர்.