க்ரைம்

தருமபுரியில் கைதான மாவோயிஸ்ட் தொடர்பாக திருப்பூர் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் இயங்கி வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தருமபுரியில் நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்க வந்துள்ளதாக, மகாராஷ்டிரா காவல் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் செட்டே (எ) சீனிவாச முல்லா கவுடு (23) என்பதும், திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்ததும், தருமபுரியில் கோயில் விழாவுக்காக வந்திருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் முதலிபாளையம் சிட்கோ பிரிவில் செட்டே தங்கியிருந்த பகுதியிலும், அவருடன் பணி நிமித்தமாக தொடர்பில் இருந்தவர்களிடமும் போலீஸார் விசாரித்தனர்.

பின்னலாடை, சாய ஆலைகள் உட்பட பல்வேறு தொழில் நிமித்தமாக லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பெயர் உள்ளிட்ட ஆவண விவரங்களை முறைப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT