க்ரைம்

சென்னை | உறுதியளித்துவிட்டு மீண்டும் குற்றச்செயல் - பெண் உட்பட 5 பேருக்கு சிறை

செய்திப்பிரிவு

திருந்தி வாழப்போவதாக எழுதிக் கொடுத்து விட்டு மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக பெண் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பயந்து போன ரவுடிகள், ஏற்கெனவே குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், "திருந்தி வாழப் போவதாகவும், ஒரு வருடகாலத்துக்கு எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம்"எனவும், நன்னடத்தை உறுதிமொழிபத்திரம் எழுதி கொடுத்து வருகின்றனர். அதன்படி தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ் (20),வண்ணாரப்பேட்டை ஹரிகரன்(20), அதேபகுதி பிரேமா (42) ஆகியோர் செயல்முறை நடுவராகிய வண்ணாரப்பேட்டை காவல் மாவட்ட துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி முன் ஆஜராகி திருந்தி வாழப்போவதாக நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் 3 பேரும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் ஓராண்டில் திருந்தி வாழ்ந்த நாட்கள் தவிர மீதமுள்ள நாட்கள்ஜாமீனில் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல், மயிலாப்பூரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் யுவராஜ் (21), வசீகரன் (20) ஆகியோரை சிறையில் அடைக்க மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திஷா மிட்டல்உத்தரவிட்டுள்ளதால், அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT