சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டம், புத்தராஜா என்ற ஊரைச் சேர்ந்த மோகன் பதன்மகள் மேகா (29). இவர் டெல்லியில் எம்.டெக், பிஎச்.டி. முடித்து விட்டு, சென்னை ஐஐடி-யில் 3 மாதகால ஆராய்ச்சி பயிற்சிக்காக ரயில்மூலம் சென்னைக்கு வந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி-பட்டாபிராம் இந்துக் கல்லூரிக்கு இடையே நேற்று தலையில் அடிபட்ட நிலையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த ஆவடி ரயில்வே போலீஸார் உடலை மீட்டு பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேகா ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ரயிலில் இருந்து குதித்தாரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.