ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடியில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் காவல் துறையைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சுமார் 50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விருப்ப ஓய்வுபெற்ற காவலர் ஒருவர் ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஐ.எப்.எஸ் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக முதலீட்டுக்கு கவர்ச்சிகரமான வட்டி தருவதாகக்கூறி பணம் வசூலித்து வந்துள்ளனர். ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால் 6 சதவீதம், ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்தால் 8 சதவீதம், ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால் 10 சதவீதம் என வட்டி வழங்குவதாக கூறியுள்ளனர். பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் கோடிக்கணக்கில் ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து மாதந்தோறும் வட்டித் தொகை பெற்று வந்துள்ளனர்.
இதற்கிடையில், ஐ.எப்.எஸ் நிறுவன உரிமையாளர்கள் திடீரென தலைமறைவான நிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏமாந்த காவல் துறையினர்
ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தில் வேலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை 400-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்து ஏமாந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
வேலூர் ஆயுதப்படையில் வழிக் காவல் பணி (எஸ்கார்டு டியூட்டி) ஒதுக்கீடு செய்யும் காவலராக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற ஜீவானந்தம் என்பவர் மூலம் காவலர்கள் முதலீடு செய் துள்ளனர். இவரிடம் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் ரூ.50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள தகவலால் காவல் துறையினர் மத்தியில் கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் ஆயுதப் படையில் ஜீவானந்தம் எஸ்கார்டு பணிக்கு காவலர்களை அனுப்பி வைக்கும் பொறுப்பில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பழக்கம். இதை பயன்படுத்தி ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறி முதலீடு பெற்று வட்டித் தொகை கொடுத்து வந்துள்ளார்.
நாளடைவில் முதலீடு செய் பவர்களின் எண்ணிக்கை பெருகியதால் அவருக்கு பல லட்சங்கள் கமிஷனாக மட்டும் கிடைத்துள்ளது.
முதலீடு தொகை முழுவதும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மூலம் கொடுத்துள்ளார். பணம் அதிகம் புழங்கியதால் கடைசியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது விருப்ப ஓய்வு பெற்று விட்டார்.
அரியூர் பகுதியில் காவலர் பயிற்சி மையம் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். அதில், 200-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம் மூலம் கிடைத்த தொகையில் சொகுசு வீடு ஒன்றையும் அவர் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் சரவணன் கைதான நிலையில் இவரும் கைதாக வாய்ப் புள்ளது. தற்போது ஜீவானந்தமும் தலைமறைவாகியுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவல் தம்பதியினர் வட்டி ஆசையால் தலா ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ.24 லட்சம் பணத்தை வங்கியில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளனர். இவரைப் போல் காவலர்கள் பலரும் வங்கியில் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் முதலீடு செய்துள்ளனர்’’ என தெரிவித்தனர்.
பணத்தை இழந்த காவலர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை. பணம் விரைவில் கிடைத்துவிடும் என ஜீவானந்தம் கூறி சமாதானம் செய்துள்ளார். பணத்தை இழந்தவர்கள் ஒருவர் கூட புகார் கொடுக்காமல் இருப்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் விசாரித்தபோது, ‘‘வங்கி மூலம் பணத்தை அனுப்பி, வங்கி மூலம் வட்டி பெற்றுள்ளனர் என்பதால் புகார் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பணம் ஓரளவுக்காவது திரும்பக்கிடைக்கும்.
வேலூர் மாவட்ட காவல் துறையில் கணவன், மனைவியாக பணியாற்றும் பலரும் ஜீவானந்தத்திடம் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்’’ என தெரிவித்தனர்.